சென்னை ஆவடியை அடுத்து இருக்கும் திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே வெங்கடேசனுக்கு வியாசர்பாடியைச் சேர்ந்த ஆஷா என்கிற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  திருமுல்லைவாயிலில் இருக்கும் காவலர் குடியிருப்புக்கு ஆஷாவை கூட்டி வந்து வெங்கடேசன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் தீ காயங்களுடன் வெங்கடேசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த காவலர்களிடம் வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக ஆஷா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வெங்கடேசனிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆஷா தான் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்தாக அவர் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆஷா கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்ததில் வேறொரு பெண்ணுடன் வெங்கடேசனுக்கு தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருக்கிறார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.