மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சீனியம்மாள். மாரியப்பன் மதுரையில் பாத்திரக்கடை வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குமரகுரு என்கிற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மாரியப்பன் இறந்து விட்டார். அதன்பிறகு பாத்திரக்கடையை சீனியம்மாளும் குமரகுருவும் கவனித்து வந்துள்ளனர்.

குமரகுருவிற்கு லாவண்யா என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்து தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உணவு அருந்தி விட்டு உறங்கச் சென்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டின் உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த சீனியம்மாளையும் மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனிடையே சத்தம் கேட்டு குமரகுரு வந்து பார்த்த போது மனைவியும் தாயும் ரத்த வெள்ளத்தில் கிடைப்பதைக்கண்டு துடிதுடித்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சீனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைவழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.