மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குச்சம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராம்குமார்(28). இவருக்கும் ஆனந்த ஜோதி என்கிற பெண்ணிற்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜீவா(5) என்கிற மகனும் லாவண்யா(3) என்கிற மகளும் இருக்கின்றனர். ராம்குமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஆனந்த ஜோதி விருதுநகரில் இருக்கும் ஒரு கடையில் பணியாற்றுகிறார்.

இந்தநிலையில் அங்கன்வாடியில் பயின்று வரும் சிறுவன் ஜீவா சம்பவத்தன்று மாலை வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளான். அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதைக்கேட்ட உறவினர்கள் கதறி துடித்தனர். ஆனந்த ஜோதியிடம் கேட்டபோது, ஜீவாவை மதியம் தூங்க வைத்து விட்டு தான் வெளியில் சென்று விட்டதாகவும், வந்து பார்த்த போது பேச்சு மூச்சின்றி கிடந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

மனைவி ஆனந்த ஜோதி மீது சந்தேகம் அடைந்த ராம்குமார் காவல்துறையில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் ஆனந்த ஜோதியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவலர்களின் கிடுக்குபிடி கேள்விகளில் மகனை கொலை செய்த அதிர்ச்சி தகவலை ஆனந்த ஜோதி கூறியிருக்கிறார். ஆனந்த ஜோதிக்கும் மருதுபாண்டி என்கிற நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மருதுபாண்டி, ராம்குமாரின் உறவினர் ஆவார். 2 நாட்களுக்கு முன்பாக ஆனந்த ஜோதியும் மருது பாண்டியும் ஒன்றாக இருந்ததை சிறுவன் ஜீவா பார்த்துள்ளான்.

கணவரிடம் இந்த விஷயத்தை ஜீவா கூறிவிடுவான் என பயந்த ஆனந்த ஜோதி, பெற்ற மகனை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். கள்ளகாதலனுடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவின் வாயை பொத்தி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பின் எதுவும் தெரியாதது போல கணவரிடம் உறவினர்களிடமும் நாடகமாடியுள்ளார். இதையடுத்து கொலை வழக்கு பதியப்பட்டு இருவரும் கைதாகி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.