தென்காசி அருகே திருமணமான சில மாதங்களிலேயே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள உச்சிபொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகள் பூங்கோதை (21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மேற்பார்வையாளராக வேலை பார்த்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் வேலை பிடிக்காமல் 2 பேரும் சுரண்டை கோட்டை தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியேறினர். ஜோகிந்தர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் தூங்க சென்ற பூங்கோதையை ஆத்திரத்தில் இருந்த ஜோகிந்தர் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். பின்னர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு இரவோடு இரவாக தப்பி சென்றார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.