திருப்பூரில் வடமாநில பெண் 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பவரை வேலைக்காக அணுகினார். இதனையடுத்து கடந்த 28ம் தேதி ராஜேஷ் நேரில் வரச் சொன்னதன் பேரில், வடமாநிலப்பெண்ணும் சென்றுள்ளார். சில இடங்களில் இருவரும் இணைந்து வேலைத் தேடிய நிலையில் பெண்ணுக்கு வேலை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து ராஜேஷிடம் சம்பந்தப்பட்ட பெண் தன்னை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது தம்பி ராஜூவுடன் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ராஜூ அவரை பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராஜூ வின் நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்களிடம் தப்பித்து நடந்தது தொடர்பாக காவல் நிலையத்தில் கதறியபடி கூறியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜூ (23), அன்புசெல்வன் (22),  கவின்குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.