திண்டிவனத்தில் இன்று பெண் ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கன்னியம்மாள் (55) கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு புற்று நோய் ஏற்பட்டது. எனவே அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை கன்னியம்மாள் வாரம் ஒருமுறை சென்னை சென்று பார்த்து விட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் சென்னைக்கு சென்று திரும்பிய கன்னியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். இன்று காலை அவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

அப்போது கன்னியம்மாள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கன்னியம்மாள் கழுத்தை அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலையாளிகள் யார்? என்பது தொடர்பக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.