கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் தொழில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த கல்பனாவிற்கு அவரது மாமியார் நாகேஸ்வரியுடன் ஒத்துவராமல் இருந்திருக்கிறது. இதன்காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படவே தனது கணவருடன் சின்னபாளையத்திற்கு கல்பனா தனிக்குடித்தனம் சென்று விட்டார்.

சரவணன் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. சம்பவத்தன்றும் சரவணன் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கோபித்து கொண்டு தொழில்பேட்டையில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சரவணன் சென்றுள்ளார்.

அங்கு கணவரை அழைக்க கல்பனா சென்றபோது, மாமியார் நாகேஸ்வரிக்கும் அவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கல்பனா, நாகேஸ்வரியின் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு கடித்து வைத்துள்ளார். பலத்த காயமடைந்து வழியில் துடித்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் நாகேஸ்வரி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் கல்பனாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.