ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஒரே மாதத்தில் 2ஆவது சம்பவம்!
மும்பையில் ஓடும் ரயிலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது, பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது
மும்பை புறநகர் ரயில்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் பெண்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஓடும் ரயிலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள பாலியல் துன்புறுத்தல் சம்பவம், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உள்ளூர் ரயிலில் 24 வயது பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேற்கு ரயில்வேயின் சார்னி ரோடு மற்றும் கிராண்ட் ரோடு நிலையங்களுக்கு இடையே கடந்த 23ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் தான் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரை அணுகியுள்ளார்.
அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், மும்பை மத்திய ரயில்வே காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354-A (பாலியல் துன்புறுத்தல்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுப்பெண்.. மறுநாளே பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் கணவர்.. நடந்தது என்ன?
மும்பையில் சர்ச்கேட் செல்லும் ரயிலில் சர்னி ரோடு ஸ்டேஷனில் அந்தப் பெண் ஏறியுள்ளார். அந்த ரயிலானது கிராண்ட் ரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது, ஆபாசமான சைகைகள் செய்த நபர் ஒருவர், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக அப்பெண் அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சந்தேகத்துக்குள்ளான அந்த நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், மும்பை உள்ளூர் ரயிலின் பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த 20 வயது பெண் ஒருவர், பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். மும்பையில் உள்ள கிர்கானில் வசிக்கும் அந்த பெண், பேலாபூரை நோக்கி கடந்த 14ஆம் தேதி உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். தேர்வெழுத சென்று கொண்டிருந்த அப்பெண், பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 40 வயதுடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.