குன்றத்தூரில் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பெண் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை அகதாவரன் கோவில் தெருவில் வசித்துவரும் விஜய் என்பவருக்கு அபிராமி என்ற மனைவியும் அஜய் மற்றும் காருணிகா என்ற குழந்தைகளும் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை நடந்துவந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று வேலைக்கு சென்ற விஜய், பணி நிமித்தமாக நேற்றிரவு அலுவலகத்திலேயே தங்கிவிட்டு காலை வீடு திரும்பியுள்ளார். வீடு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது. பின்னர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்ற விஜய், தனது குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். 

விஜயின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகள் இறந்துகிடந்த நிலையில், விஜயின் மனைவி அபிராமி வீட்டில் இல்லை; தப்பியோடியுள்ளார். 

அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் குழந்தைகளை கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக போலீஸார் விரிவான விசாரணை நடத்திவருகின்றனர். கள்ளக்காதல் தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அபிராமியை கைது செய்தால்தான் உண்மை தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.