நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கட்டி வைத்து தாக்கி, கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

மும்பை, வசாய் பகுதியை சேர்ந்தவர் பவிஷ்யா புராஹோகைன்.  இவர் மனைவி குயின் சியா . இதே பகுதியில் வசிப்பவர் நாயக். பவிஷ்யாவின் நண்பரான நாயக், அடிக்கடி வீட்டுக்கு வருவார். இதனால் பவிஷ்யாவுக்கு மனைவி மீது சந்தேகம் வரத் தொடங்கியது. நாயக்குடன் அவர் தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார். இதைத் தொடர்ந்து குயின்சியாவை அடிக்கடி அடித்துள்ளார். தனக்கும் நாயக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியும் தாக்குதலை தொடர்ந்துள்ளார்.

நேற்று முன்தினமும் வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் தூங்கச் சென்றுவிட்டார் பவிஷ்யா. அப்போது நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டினார். சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கினார்.  மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கண்களில் தூவினார். இதனால்  பவிஷ்யா அலறித்துடித்தார். பின்னர் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து அவர் மீது ஊற்றினார். பவிஷ்யாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

நாயக்கையும் குயின்சியாவையும் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவிஷ்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.