வேலூரில் இளம்பெண்ணை கத்திமுனையில் கடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், வேறு ஏதேனும் பெண்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனரா எனும் கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சினிமா பார்க்க இரவு நேர காட்சிக்கு சென்றுள்ளார். பிறகு, சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் இருவரும் ஏறியுள்ளனர். அந்த ஆட்டோவில் அவர்களுடன் இன்னும் 4 பேர் பயணித்துள்ளனர். 

சிறிது நேரத்து கழித்து, ஆட்டோ வேறு பாதையில் செல்வது சுதாரித்துக்கொண்ட அந்த பெண், தன் ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவர், ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்கும் முன்னரே, இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளது அந்த கும்பல். அப்பொழுது தான் இருவர்களுக்கும் ஆட்டோ ஒட்டுனர், பயணம் செய்த 4 பேரும், ஒரே கும்பல் என்பதும் தங்களை கடத்தி செல்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

பின்னர், இளம்பெண், அவரது ஆண் நண்பர் இருவரது வாயையும் பொத்தி, ஆட்டோ வேலூர் சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியது. அந்த கும்பல் பாலாற்றங்கரைக்கு சென்று அங்கு ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் ஏடிஎம் கார்டை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பிறகு, ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அதிலிருந்து ரூ.40 ஆயிரம் பணம் எடுத்த அந்த கும்பல் அந்தப் பணத்தில் புதிய ஆடைகள் வாங்கியும், உயர்ரக மதுபானங்கள் வாங்கி செலவழித்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணைக்கு பிறகு, அவர்கள் தான் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடம் இருந்து பணம், நகையை பறித்தது தெரியவந்தது. அதன்பேரில், கூட்டுப் பாலியல் பலாத்காரம், தொடர் குற்றங்களில் ஈடுபடுவது, கூட்டுக் கொள்ளை, ஆயுதம் வைத்து மிரட்டல், கொலை மிரட்டல், கடத்தி சிறை வைப்பது, கட்டாயப்படுத்தி கடத்தியது, அடைத்து வைப்பது, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தடயங்கள், ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

வேலூரில் இளம் பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் செய்த 5 பேரில் தப்பியோடிய ஒருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் எந்தவொரு தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இளம்பெண்ணை கடத்திய இந்த கும்பல் இவ்வளவு துணிச்சலுடன் முதன் முறையாக கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் இதுப்போல் இன்னும் பல பெண்களை இவர்கள் கடத்தி பலாத்காரம் செய்து இருக்கலாம் என்றும் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், பெண்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதேனும் உள்ளதா, அதைக் காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதா, அவர்கள் எண்ணில் இருந்து யாருக்கெல்லாம் அழைப்பு சென்றுள்ளது, அழைப்பு வந்துள்ளது, வாட்ஸ் அப் மெசேஜ் உள்ளிட்ட பதிவுகள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வேலூரில் பெண்கள் யாராவது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம். நேரில் வர அச்சமடையும் பெண்கள் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் வேலூர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.