அவசர புத்தியாலும், உடம்பு சுகத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற  2 குழந்தைகளை கொன்று, அன்பான கணவனையும் விட்டுவிட்டு இப்படி தன் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டோமே என ஜெயிலில் கதறி அழுதுள்ளார் அபிராமி. 

சென்னையை அடுத்த குன்றத்தூரில் வசித்துவரும் விஜய், தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு விஜய் வீட்டுக்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கினார்.  

நேற்று முன்தினம் அதிகாலை வீட்டுக்கு வந்த விஜய், வீட்டின் கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கதவைத் திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்ததைக் கண்டு விஜய் சத்தம் போட்டுக் கதறினார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையைத் தொடங்கினர் காவல் துறையினர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், விசாரணையில் தெரியவந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. அபிராமி தலைமறைவானதால், அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குழந்தைகளுக்கு அவர் பாலில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போலீஸார், அவரை  நேற்று அதிகாலை காலை நாகர்கோவிலில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை  நடந்தது.

அதில், 8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடி புகுந்த பின்னர், அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்குக் குடும்பத்தோடு சென்று வந்தோம். அப்போது தான், அங்கு பில் போடும் பணியிலிருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர், அடிக்கடி பிரியாணி வாங்கச் சென்றேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. இதனால், குடும்பத்தை விட்டு விலகி விட நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார்.

10 நாட்களுக்கு முன்னர் கணவருடன் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினேன். சுந்தரத்தின் வீட்டில் சென்று தங்கினேன். இதனால், எனக்கும் விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஜய்யோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும், சுந்தரத்துடனான 2 மாதப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை. அப்போது தான் கணவர், குழந்தைகளைக் கொன்றுவிட்டு, நாம் எந்தப் பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார் சுந்தரம். நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன். ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்தே, கணவர் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய திட்டமிட்டேன். அன்றிரவு 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகள் கலந்த பாலைக் கொடுத்தேன்.

ஆனால், மறுநாள்  காலையில் கணவர் விஜய்யும், மகன் அஜய்யும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் இரண்டு பேரும் பிழைத்துக் கொண்டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என நினைக்கிறேன். நேற்று முன்தினம் காலையில், வேலைக்குச் செல்வதற்கு முன்னதாக கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்கச் சென்றார் விஜய். அதற்கு நான் அனுமதிக்கவில்லை. அவள் அசந்து தூங்குவதாகச் சொன்னேன்.

அவள் விழித்துக்கொள்வாள் என்று நான் சொன்னதை நம்பி, வேலைக்கு சென்ற விஜய் அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை. மறுநாள், மீண்டும் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலைக் கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர், கழுத்தை நெரித்துக் கொன்றேன். வெளியூருக்குத் தப்பிச் செல்ல, என்னிடம் பணம் இல்லை. இதனால் தாலி செயினை அடகு வைத்து பணத்தைத் தயார் செய்தேன்; நாகர்கோவில் சென்றேன்’’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விசாரணையை அடுத்து நேற்றைய தினம் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இரவே புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சென்றதும் கதறி அழுத அபிராமி, தனது அவசர புத்தியாலும், உடம்பு சுகத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற  2 குழந்தைகளை கொன்று, அன்பான கணவனையும் விட்டுவிட்டு இப்படி தன் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டோமே என கதறி அழுதுள்ளார்.