நாகர்கோவில் அருகே கேசவன்புதுாரைச் சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி சரோஜா (55). இவர் தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்கும் பணி நடக்கும்போது, தேங்காய்களை சேகரிக்கச் செல்லும் பணி செய்து வந்தார். 

சரோஜா நேற்று காலை மங்காவிளை, நெடுவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு தேங்காய் சேகரிக்கச் சென்றார். அந்தத் தோப்பின் மையத்தில் 40 அடி ஆழக்கிணறு ஒன்று உள்ளது. தேங்காய் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சரோஜா கிணற்றைக் கவனிக்கவில்லை. கிணற்றின் பக்கவாட்டுச் சுவரும் உயரம் குறைவாக இருந்தது.

அந்தப் பகுதியில் வெட்டப்பட்ட தேங்காய்களை எடுக்கச் சென்ற சரோஜா எதிர்பாராதவிதமாகக் கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் கீழே விழுந்த வேகத்தில் படுகாயம் அடைந்த சரோஜா அப்படியே மயங்கிச் சரிந்தார்.

முதலில் அவர் கிணற்றில் விழுந்த விவரம் பலருக்கும் தெரியவில்லை. சக தொழிலாளர்கள் அவரைத் தேடினர். அப்போது தான் அவர் கிணற்றில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு வலையைப் பயன்படுத்தி அதில் சரோஜாவை துாக்கிக் கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.