கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஒரு பிரியாணி கடை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கடையின் அருகே ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. அந்த  ஆட்டோவுக்குள்  30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அமர்ந்து ஜாலியாக பாரில் மது அருந்துவது போல மதுகுடித்து கொண்டிருந்தார். 

இதனை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியது யார் என்பதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ஆட்டோவின் உரிமையாளர் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த செல்வகுமார்  என்பது தெரியவந்தது. 

மேலும் அந்த ஆட்டோவில் அமர்ந்து மது குடித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கவுதமி என்பதும் அவர் பொள்ளாச்சியில் தங்கி வேலை பார்த்து வரும் தனது கணவரை பார்ப்பதற்காக வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் கணவரை பார்த்து விட்டு ஊருக்கு கிளம்புவதற்காக செல்வகுமார் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

அப்போது ஆட்டோ மார்க்கெட் வழியாக செல்லும்போது அங்கிருந்த டாஸ்மாக் கடையை பார்த்ததும் அந்த பெண் ஆட்டோவை நிறுத்த சொல்லி உள்ளார். பின்னர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து ஆட்டோவில் அமர்ந்து குடித்தது தெரியவந்தது.


 
இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் செல்வகுமார் மீது பொது இடத்தில் மது அருந்த அனுமதித்தது, பெண் மதுகுடித்தபோது ஆட்டோ டிரைவர் வெளியில் நின்று கொண்டு பொது இடத்தில் சிகரெட் குடித்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.