துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தைக் கொண்டு துரத்திய சிங்கப்பெண்!
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு பெண் ஒருவர் துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது
ஹரியானா மாநிலம் பிவானியில் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதில், பதிவாகியுள்ள, துப்பாக்கியால் சுடும் மர்ம நபர்களை பெண் ஒருவர் துடைப்பத்தை கொண்டு துரத்தும் காட்சிகள் தற்போது வைராகி வருகிறது. அந்த சிங்கப்பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரவி பாக்ஸர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிகிஷன் என்பவர், பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ல ஹரிகிஷன் மீதுதான் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, ஹரிகிஷன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை பிவானி போலீசார் கைது செய்த நிலையில், அவரது வீட்டில் வைத்தே அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. பிவானி டாபர் காலனியில் நேற்று காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒன்பது ரவுண்டுகள் சுட்டுள்ளனர். இதில், நான்கு குண்டு ஹரிகிஷன் மீது பாய்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடில் படுகாயமடைந்த ஹரிகிஷன் ரோஹ்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில், ஹரிகிஷன் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் இரண்டு பைக்குகள் அவர் அருகில் வந்து நிற்கின்றன. அந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் இறங்கி ஹரிகிஷன் மீது துப்பாக்கியால் சுடுகின்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட ஹரிகிஷன், அங்கிருந்து தப்பியோட முயற்சிகிறார். அதற்குள் அவர் மீது குண்டுகள் பாய்கின்றன. இதனால், அங்கேயே அவர் முழங்காலிட்டு சரிந்து விழுகிறார். இருப்பினும், விடா முயற்ச்சியாக எழுந்து தனது வீட்டுக்குள் ஓடி கதவினை பூட்டிக் கொள்கிறார்.
முல்லை பெரியாறு கார் பார்க்கிங்: சர்வே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த சமயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஹரிகிஷன் வீட்டின் வாசல்களுக்கு வெளியே இருந்து சுடுகிறார்கள். அவர்கள் கதவை திறக்க முயற்ச்சிக்கும் அந்த சமயத்தில், திடீரென நுழையும் பெண் ஒருவர், துப்பாக்கி சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு துரத்தும் காட்சிகள் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, அங்கிருந்து தப்பித்த அந்த மர்ம நபர்கள், அப்பெண் மீதும் துப்பாக்கியால் சுடுகின்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பியுள்ளார். ஆயுதம் ஏந்திய அவர்களை தைரியமாக துரத்திய பெண்ணை பலரும் பராட்டி வருகின்றனர். ஹரிகிஷனின் உயிரை காப்பாற்றிய அந்த பெண் அவரது குடும்ப உறுப்பினரா அல்லது அண்டை வீட்டுப் பெண்ணா என்பது தெரியவில்லை.