கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் இருக்கும் காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் வேதவள்ளி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்குழலி என்கிற 5 வயது மகள் இருந்துள்ளார். இதனிடையே வேதவள்ளியின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விடவே, அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

நேற்று இரவு இரண்டு மணியளவில் அவர்கள் வீட்டில் தகராறு நடந்ததாக அக்கம்பத்தினர் கூறுகிறார்கள். தகராறு நடந்த சிறிது நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனக்கூறி எதிர் வீட்டில் கார் கேட்டுள்ளனர். அதன்பிறகு கால் டாக்ஸியை வரவழைத்து வேதவள்ளியின் தந்தை மற்றும் தம்பி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலையில் ரத்த காயம் இருந்ததாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

பின்னர் காலையில் நீண்ட நேரமாக வேதவள்ளியின் வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது.அக்கம்பத்தினர் வந்து வீட்டில் இருப்பவர்களை அழைத்துள்ளனர். ஆனாலும் எந்த பதிலும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சிங்காநல்லூர் காவலர்கள் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பதை அறிந்து ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு வேதவள்ளி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

உடனே கதவை உடைத்து காவலர்கள் உள்ளே சென்றுள்ளனர். வீட்டினுள் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு ஆங்காங்கே ரத்த கறைகளாக காட்சியளித்தன. வேதவள்ளியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த வீட்டிற்கு காவலர்கள் தடவியல் நிபுணர்களை சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த சிறுமி கார்குழலியும் உயிரிழந்திருக்கிறார். இது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் வேதவள்ளியின் தந்தை மற்றும் தம்பியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.