நள்ளிரவில் சரக்கு தராத விற்பனையாளர் சுட்டுக் கொலை!
நள்ளிரவில் சரக்கு கொடுக்க மறுத்த மதுக்கூட விற்பனையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
தலைநகர் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டா, பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹைபத்பூர் கிராமத்தில் ஒயின்ஷாப் ஒன்று அமைந்துள்ளது. அந்த மதுக்கடைக்கு அதிகாலை 2 மணியளவில் சென்ற மூன்று பேர், மதுக்கடை விற்பனையாளரிடம் சரக்கு தருமாறு கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்த நேரத்தில் சரக்கு தர முடியாது என மதுக்கூட விற்பனையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மூவர், விற்பனையாளரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி ஓம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் சிறுவர்கள் என தெரிகிறது.
இதுகுறித்து மத்திய நொய்டா காவல் துணை ஆணையர் சுனிதி கூறுகையில், “அதிகாலை 2 மணியளவில் மூடப்பட்டிருந்த கடைக்கு சென்ற மூன்று சிறுவர்கள், கடையின் பின்புறம் சென்று கதவை தட்டி, தங்களுக்கு மதுபானம் விற்க வேண்டும் என்று கோரியுள்ளனர். விற்பனையாளர் அவர்களின் கோரிக்கையை மறுத்ததால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இறுதியில், விற்பனையாளரை தங்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.” என தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சுனிதி கூறினார்.