ஒருத்தவன ஏமாத்தணும்னா முதல்ல அவன் ஆசையை தூண்டனும்" இந்த டேக் லைனை பயன்படுத்தி பல மோசடிப்பேர்வழிகள் இளைஞர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி ஏமாற்றிப்பிழைப்பதையே தொழிலாக வைத்து அலைகின்றனர்.அனால் ஒரு சில குரூப் பணக்காரர்களை பேராசை பிடித்தவர்களை மட்டுமே குறிவைத்து காய் நகர்த்துகிறது.

சென்னை வளசரவாக்கத்தில் வின்ஸ்டார் என்ற பெயரில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சொல்லி சதுரங்கவேட்டை பட பாணியில் கூறி 100 கோடி ரூபாய் சுருட்டியதாக பகீர் புகார் எழுந்துள்ளது

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல பணம் சம்பாதிக்க எளிய வழி சொல்லிக்கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி, மெகா மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வின்ஸ்டார் ஏழுமலை. சென்னை வளசரவாக்கத்தில் வின்ஸ்டார் என்ற பெயரில் மார்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஏழுமலை - சித்ரா தம்பதியர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 வங்கி வேலை நாட்களில் பணத்தை இரட்டிப்பாக கஸ்டமர்கள் வங்கி கணக்கில் செலுத்துவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

கோட் சூட் போட்ட 30 தடியர்களை நியமித்து அவர்களிடம் ஆசையை தூண்டி தங்கள் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். சிலர் கோடி ரூபாய் கூட முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ஏழுமலை சித்ரா தம்பதி நிறுவனத்தை மூடிவிட்டு எஸ்கேப் ஆகி விட்டது. தலையில் விக் வைத்துக் கொண்டு கோட் சூட் போட்ட முகவர்களும் பட்டை நாமம் போட்டுவிட்டு சென்றுள்ளது.

பலர் தங்களிடம் உள்ள கருப்புபணத்தை இந்த மோசடி கும்பலிடம் முதலீடு செய்துள்ளதால் போலீசில் கூட புகார் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் இரட்டிப்பாகும் என்று ஆசையில் நம்பி பணம் செலுத்தியவர்கள் வாழ்க்கையே இருண்டு போனதாக புலம்பி வருகின்றனர்.

ஏழுமலை கடந்த சில மாதங்களில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவிற்கு பணம் சுருட்டி உள்ளதாக சொல்கிறார்கள், முகவர்களாக செயல்பட்ட 30 பேரும் பல கோடிகளை தங்கள் பங்கிற்கு எடுத்துக் கொண்டதாக சொல்கிறார்கள்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தால் புகார் ஏற்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். 25 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மோசடி புகார்களை உள்ளூர் காவல் நிலையங்கள் விசாரிப்பதில்லை, சென்னை காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றபிரிவோ அல்லது பொருளாதார குற்றபிரிவு காவல்துறையினரோ தான் விசாரிக்க இயலும் என்பதால் காவல்துறையினர் புகாரை விசாரிக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், போலீசில் புகார் அளித்தால் பணம் திரும்ப கிடைக்காது என்று சில முகவர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.