காதலித்து கல்யாணம் செய்த கணவன் எந்நேரமும் டிக்-டாக், பேஸ்புக்கில் மூழ்கியதால் மனமுடைந்த புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி சக்திவேல்க்கும், அதே பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்று அஞ்சிய இந்த காதல் தம்பதி ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வந்தனர். இங்குள்ள ஆட்டையாம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து 4 மாசமாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சக்திவேல் செல்போனில் பேஸ்புக், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளத்தை பார்த்து பொழுதை போக்கி வந்தார். காதலித்தபோது இருந்த, காதல், அன்பு, பாசம் தற்போது சக்திவேலிடம் இல்லை என்று ரேணுகா தேவி கூறி வந்தார்.

இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் சக்திவேல் போனை மணிக் கணக்கில் பார்த்து வந்தார். இது குறித்து ரேணுகா தேவி வாக்குவாதம் செய்தார். ஆனால் சமூக வலைதளத்தில் மூழ்கியிருந்த அவர் திரும்பவில்லை.

இதனால் விரக்தியடைந்த ரேணுகாதேவி வீட்டில் இருந்து டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரேணுகாதேவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் திருமணம் செய்த சக்திவேல் எந்த நேரமும் போனில் டிக் டாக் பயன்படுத்து வேறு சில பெண்களுடன் ரொமான்ஸ் செய்து வந்ததும், எந்நேரமும் போனில் மூழ்கி இருந்ததால் மனமுடைந்த ரேணுகாதேவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்ததுள்ளது.