திருப்பூர் மாவட்டம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி உமாதேவி. கணவன் மனைவி இருவரும் திருப்பூரில் இருக்கும் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். வெங்கடேசனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்திருக்கிறார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருந்ததால் தினமும் மது அருந்த தொடங்கிய வெங்கடேசன், நாளடைவில் அதற்கு அடிமையாகி இருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த 17ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததாக வெங்கடேசன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழக்கவே விபத்து வழக்காக பதிவு செய்து வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேசன் கட்டையால் தாக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இதனால் அவரது மனைவி உமாதேவியை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கணவரை கட்டையால் தாக்கியதை தாக்கியதாக உமாதேவி கூறியிருக்கிறார். அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளான வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களை விற்று மது அருந்த தொடங்கியிருக்கிறார். சம்பவத்தன்று மிக்ஸியை எடுத்து விற்று குடித்த கணவர் மீது ஆத்திரம் கொண்ட உமாதேவி கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்திருந்த வெங்கடேசனை விபத்தில் அடிபட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை வெளிவரவே உமாதேவி காவல்துறையில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் உமாதேவியை சிறையில் அடைத்தனர்.