ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில் இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் மனைவி சாந்தி வேலைபார்த்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சாந்தி காலை வீட்டில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு ஜன்னல் கம்பியில் கழுத்து கட்டப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.