கடலூர் அருகே குழந்தை சிவப்பாக பிறந்ததால், மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த மாளிகைமேடு பகுதியில் வசித்து வந்தவர்கள் ராஜன் அமலா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் அடிக்கடி ராஜன் வரதட்சணை கேட்டும், குழந்தை சிவப்பாக உள்ளதால் மனைவியான அமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும் சண்டையிட்டும் வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று வெகுநேரமாகியும் அமலா எழுந்திருக்கவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் அமலாவை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜனை தேடிவந்தனர். இதனையடுத்து, காவல் நிலையம் சென்ற ராஜன் மனைவியை கொலை செய்ததாக சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தலையணையால் முகத்தில் அழுத்தி, கொலை செய்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.