அடுக்குமாடி கட்டிடத்தில் 19வது மாடியில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து பலியான சம்பவத்தில், திடீர் திருப்பமாக, நடத்தையில் சந்தேகம் காரணமாக கணவனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் ராணுவ வீரர்கள் வீட்டு வசதி சங்கம் சார்பில் 26 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்றது வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், வருகிற பொங்கலன்று இக்கட்டிடம் திறக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கட்டிடத்தில் இறுதிகட்டமாக வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வந்தது.

 

இதில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த சந்தோஷ் குமார் (28), அவரது மனைவி பீலாதேவி (22) ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். கடந்த 27ம் தேதி காலை தம்பதி 19வது மாடியில் தரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பீலாதேவி 19வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில்  உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து தாழம்பூர் போலீசார் அங்கு சென்று பீலாதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதலில் பீலாதேவி தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆனால், அக்கட்டிடத்தில் தவறி விழ முடியாத அளவிற்கு  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து பீலாதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறுதி செய்த போலீசார் அவரது கணவர் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். 

கடந்த சில நாட்களாக வாய் திறக்காத இருந்த சந்தோஷ்குமார்,  பியூலாதேவி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள மற்ற தொழிலாளர்களுடன் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக கூறப்படுகிறது. அப்படி பழகக் கூடாது என்று கணவர் எச்சரித்தும் தனது பழக்கத்தை தொடர்ந்துள்ளார் பியூலாதேவி. சம்பவத்தன்றும் ஒருவரிடம் அவர் சிரித்து பேசியதால், தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள சந்தோஷ்குமார், அப்போது உண்டான ஆத்திரத்தில் மனைவியின் தலையில் தாக்கியதோடு, அவரை 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொன்றதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.