குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த குடிக்கார கணவனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பத்ராராஜ் (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (30). பத்ராராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், அவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. மனைவியிடம் பணத்தை பறித்து கொண்டு மது குடிக்க செல்வார். இதையொட்டி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில், இன்று காலை பத்ராராஜ், மதுகுடிக்க மனைவி காளீஸ்வரியிடம் பணம் கேட்டார். ஆனால், அவர் கொடுக்க மறுத்தார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பத்ராராஜ், அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்ட நேரத்துக்கு பின் அவர் வீடு திரும்பினார். அப்போது, மதுகுடித்து இருந்ததால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த பத்ராராஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, காளீஸ்வரியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறிதுடித்தபடி அவர் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

 

காளீஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு போதையில் இருந்த பத்ராராஜியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்ராராஜியை கைது செய்தனர்.