அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி மாரியம்மாள் . இவர்களுக்கு 2½ வயதில் நானி என்ற மகன் உள்ளான்.
முனியப்பன் லஸ்கராக  பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கோபமடைந்த மாரியம்மாள், தாய் வீடான திருவையாறை அடுத்த ஒக்கக்குடிக்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மாரியம்மாளின் அண்ணன் மணிவண்ணன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு முனியப்பன் செல்லவில்லை.
இதையடுத்து  கடந்த 21-ந் தேதி இரவு முனியப்பன் ஒக்கக்குடிக்கு வந்தபோது என் அண்ணன் இறுதி சடங்குக்கு ஏன் வரவில்லை? நீ இப்போது ஏன் வந்தாய்? என்று மாரியம்மாள் கேட்டார். இதனால் முனியப்பன்- மாரியம்மாள் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு நின்ற மாரியம்மாளின் தந்தை பழனிச்சாமி ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவரும், மாரியம்மாளும் சேர்ந்து முனியப்பனை திடீரென தாக்கினர். முனியப்பனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் முனியப்பன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி எரித்து வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாரியம்மாளிடம் விசாரணை நடத்தினர். இதில் கணவரை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் மாரியம்மாள், அவரது தந்தை பழனிசாமி, அவரது தாய் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.