மதுரை மாவட்டம் மாரனவாரியேந்தல் கிராமம் திருமால்புரத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவருடைய மகன் இளஞ்செழியன் கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு கட்டிட வேலைக்காக தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டைக்கு வந்தார். அங்கு நண்பரின் தங்கை ரேவதியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இளஞ்செழியன் மனைவியுடன் வேலை தேடி பல ஊர்களுக்கு சென்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு இளஞ்செழியன்-ரேவதி தம்பதியினர் தஞ்சைக்கு வந்தனர். தஞ்சை வண்டிக்கார தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து அவர்கள் தங்கினர். தஞ்சையில் கட்டிட வேலைக்கு சென்றபோது அம்மாப்பேட்டை அருகே பொட்டுவாச்சாவடியை சேர்ந்த இளவாளனுடன் ,  இளஞ்செழியனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனால் இளஞ்செழியன் வீட்டிற்கு இளவாளன் அடிக்கடி வந்து சென்றார். அப்போது ரேவதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த விஷயம் இளஞ்செழியனுக்கு தெரிய வந்ததால் அவர் தனது மனைவியையும், நண்பரையும் கண்டித்தார். இருந்தாலும் இருவரும் தொடர்பை கைவிடவில்லை. இந்த சம்பவத்தால் இளஞ்செழியனை கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதை இளவாளன் தவிர்த்து விட்டார். இதனால் சரிவர வேலை கிடைக்காததால் கஷ்டப்பட்ட இளஞ்செழியன் தனது சொந்த ஊருக்கு சென்று வேலை பார்த்தார்.

வீட்டில் கணவர் இல்லாததால் இளவாளனை அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து அவருடன் ரேவதி உல்லசமாக இருந்து வந்தார். வாரம் அல்லது மாதம் ஒரு முறை மனைவி, குழந்தையை பார்க்க தஞ்சைக்கு வரும் இளஞ்செழியனுக்கு மனைவியும், நண்பரும் நெருங்கி பழகும் தகவல் தெரிந்து ஆத்திரம் அடைந்து வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு  தனது கணவரை போனில் தொடர்பு கொண்ட ரேவதி, நான் திருந்திவிட்டேன். நமக்குள் இனிமேல் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சேர்ந்து வாழ்வோம். பொங்கல் பண்டிகைக்கு தஞ்சைக்கு வாருங்கள். அப்பாவை பார்க்க வேண்டும் என மகனும் ஆசைப்படுகிறான் என கூறினார். இதை உண்மை என்று நம்பிய அவர் தஞ்சைக்கு வந்தார்.


அங்கு அவரை சந்தித்த இளவாளன், தான் தவறு செய்து விட்டதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் கூறியதுடன் தன்னுடன் சேர்ந்து மது குடிக்க வேண்டும் என கூறி இளஞ்செழியனை அழைத்துள்ளார். இதையடுத்து இளஞ்செழியன், இளவாளன், அவரது நண்பர் அரித்துவாரமங்கலத்தை சேர்ந்த கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேவதியின் வீட்டில் வைத்தே மது குடித்தனர்.

அப்போது மதுபோதையில் இருந்த இளஞ்செழியனை, ரேவதி, அவரது கள்ளக்காதலன் இளவாளன், கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றனர்.

இதையடுத்து  இளஞ்செழியன் உடலை போர்வையால் சுற்றி 3 பேரும் தூக்கிக்கொண்டு 
தஞ்சையை அடுத்த மின்னாத்தூர் வாய்க்கால் பாலத்தின் கீழ் தண்ணீர் செல்வதற்காக போடப்பட்டிருந்த சிமெண்டு குழாய்க்குள் வைத்து உள்ளே திணித்து விட்டு அங்கிருந்து வந்து விட்டனர். நீண்ட நாட்களாக மகன் வீட்டுக்கு வராததால் இளஞ்செழியனின்  தாய் நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியே கணவனை கொன்றது தெரியவந்தது. 

இதையடுத்து ரேவதி, இளவாளன், கலியபெருமாள், மணி ஆகிய 4 பேரையும் அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இவர்களை மின்னாத்தூர் வாய்க்காலுக்கு சென்று எலும்புக்கூடாக காணப்பட்ட இளஞ்செழியனின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.