நாகை மாவட்டம், தலைச்சங்கோட்டையை சேர்ந்த சதீஸ்குமார், அப்பராசபுத்தூர் சேர்ந்த கலைமதி என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்தது. கடந்த பல வருடங்களாக காதலித்த இவர்கள், இரு வீட்டினர் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.காதல் திருமணம் செய்த நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் வீட்டுக்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார் கலைமதி. அப்போது இருவரும் சேர்ந்து வாழ்வது, கலைமதியை சேர்த்துக் கொள்வது பற்றி அவரது கணவர் சதீஷ், அவரது அப்பா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மனைவி கலைமதி கணவரை வெறித்தனமாக கல்லால் தாக்கியுள்ளார்.

அப்போது, உடன் இருந்த கலைமதியின் தந்தை நாகராஜூம் தான் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஸை  குத்தியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்களை சமாலிக்க முடியாமல்  நிலை குலைந்த சதீஸை அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து மருத்துவ மனைக்கு அழைத்து சென்றபோது வழியில் சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சதீஸின் மனைவி மற்றும் மாமனார் நாகராஜ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.