குடிபோதையில் மனைவியை உயிரோடு எரித்து கணவன் கொலை செய்துள்ள பயங்கர சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  வெறிச் செயலில் ஈடுபட்ட கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .  நெல்லை அருகே சீதபற்பநல்லூர் அடுத்துள்ள கீழ கருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35) இவர் அதே ஊரில் கூலித் தொழில் செய்து வருகிறார் .  மனைவி ஜெயா (31) இத் தம்பதியருக்கு இரண்டு பெண்  குழந்தைகள் மற்றும் ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது . 

 

கூலி வேலை செய்யும் சுரேஷ் அன்றாடம் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .  இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று  குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவி ஜெயாவிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளார் ,   வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது இதில் ஜெயாவை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார் ,  ஒருகட்டத்தில் குடிவெறி தலைக்கேறியதில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சுரேஷ் , ஜெயா மீது ஊற்றி தீ  வைத்து எரித்ததாகத் தெரிகிறது . இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் ஜெயா அலறி துடித்தார் .  தன்னை  காப்பாற்றும்படி  அபயக்குரல் எழுப்பினார் . அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஜெயாவின் நிலைமையை கண்டு அதிர்ந்தனர் .  அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர் . 

அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .  இதுதொடர்பாக சீதபநல்லூர் போலீசார் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் .  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயா அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  ஜெயா கொடுத்த வாக்குமூலத்தில் கணவர் தன்னை தீ வைத்து எரித்ததாக கூறியிருந்தார்.   இதனையடுத்து சுரேஷ் மீது கொலை வழக்கு  செய்யப்பட்டது ,  குடிவெறியில் கணவனே மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.