திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (68). இவரது மனைவி மரிய ஷீலா(62 ). இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். 

வெளிநாட்டில் தையல் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த பாக்கியராஜ் பின்னர் சொந்த ஊருக்கு வந்து தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்துள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்திருக்கிறார்.

பாக்கியராஜுக்கும் அவரது மனைவி மரியஷீலாவிற்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கண் பார்வை கோளாறால் அவதிப்பட்டு வந்த பாக்கியராஜ் தனது சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்க நினைத்தார். ஆனால் மரியஷீலா தனது பெயரில் சொத்துக்களை எழுதி வைக்க வற்புறுத்தி இருக்கிறார்.ஆனாலும் பாக்கியராஜ் அதனை பொருட்படுத்தாமல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்வேயரை அழைத்து நிலத்தை அளந்து பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாக்கியராஜ் மீது  மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்ததாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்டு மகன்கள் ஓடி வந்திருக்கின்றனர். உடனடியாக தீயை அனைத்து சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மரியஷீலா மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துத்தகராறில் கணவனை மனைவியே எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.