மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கடுமையாக தாக்கி தாலியை அறுத்து வீசிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து, ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டாலும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து, தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. டாஸ்மாக் மூடிய போது அமைதியாக இருந்த தமிழகம் அதை எப்போது திறந்ததோ அப்போதில் இருந்து தொடர் கொலைகள் மற்றும் குடும்ப சண்டைகள் அதிகரித்து காணப்படுகிறது.  

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி(27). கடந்த 14ம் தேதி வீராசாமி தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வீராசாமி மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மேலும், மனைவி கழுத்தில் இருந்த தாலியை அறுத்து வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி கதறி அழுதுள்ளார். அப்போது, இந்த செய்தியை அறிந்த வீராசாமியின் தாய் சாந்தி மகனுடன் சேர்ந்து கொண்டு சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி மீண்டும் இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதில், படுகாயமடைந்த சரஸ்வதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, இதுதொடர்பாக மனைவி சரஸ்வதி வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் வீராசாமியை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வீராசாமி தாய் சாந்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.