மதுரை மருத்துவ மாணவர் உதயராஜ்  தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது .இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார் , மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் மன அழுத்தமே அவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என பகீர் கிளப்புகிறார்

 

மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் மருத்துவத் துறையில் முதலாமாண்டு படித்து வந்தார் உதயராஜ். அவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரை இழந்து வாடும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மருத்துவ மாணவர்களின் தற்கொலையும் ,மர்ம மரணங்களும் அதிகரித்து வருகின்றன.இது  ஆழ்ந்த கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. 

மருத்துவ மாணவர்களின் மத்தியில் அதிகரித்து வரும் மன அழுத்தமே இத்தகைய மரணங்களுக்குக் காரணம்.மரணங்கள் மட்டுமின்றி ,மன அழுத்தத்தின் காரணமாக உடல் மற்றும் உள ரீதியான கடும் பாதிப்புகளுக்கும் மருத்துவ மாணவர்கள் உள்ளாகிறார்கள். வெளியில் தெரியும் நிகழ்வுகள் மிகவும் குறைவானதே. மருத்துவக் கல்லூரிகளில் கலை இலக்கிய கலாச்சார மற்றும் பண்பாட்டு  நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாளிக்கப்படுவதில்லை. விளையாட்டு ஊக்கப்படுத்தப் படுவதில்லை.ஆரோக்கியமான பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பதில்லை.கல்வி தொடர்பான பயிற்சிகளும் முறையாக இல்லை. குறைபாடுகள் நிறைந்ததாக, தரம் தாழ்ந்ததாக உள்ளன. ஆசிரியர்கள் மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனமும், அன்பும் ,அக்கறையும் செலுத்துவது குறைந்துவருகிறது.மாணவர் ஆசிரியர் உறவுகளில் விரிசல்கள் அதிகரித்துள்ளன.இவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கடுமையான வேலைகள் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தொடர்பில்லாத , அவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லாத வேலைகளும், அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. முதல் அமைச்சர் காப்பீடு திட்டம் உட்பட  அனைத்து திட்ட வேலைகளும் அவர்களிடம் வாங்கப்படுகின்றன. இது எம்சிஐ விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இவை அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். தமிழக அரசின், இத்தகைய மாணவர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர் உதயராஜ் தற்கொலை குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மாணவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமான, வேலை பளு குறைக்கப் பட வேண்டும்.அவர்களுக்குத் தொடர்பில்லாத வேலைகளை வழங்கக்கூடாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட இப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ,கல்லூரிகள் அளவிலும்,மாநில அளவிலும்  சிறப்புத்  ``தீர்வாயங்களை’’ அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.