பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்து வரும் நிலையில் வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சியில் காமபிசாசுகள் இளம்பெண்களை மிரட்டி எடுத்த பாலியல் கொடூர வீடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர வைத்து வருகிறது. தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ள திருநாவுக்கரசிடம் இருந்து பல்வேறு தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்நிலையில் வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட கல்லூரி மாணவி அளித்துள்ள புகாரில் திருநாவுக்கரசு கோஷ்டிகள் செய்த அட்டூழியங்களை புட்டுபுட்டு வைத்துள்ளார் அந்தப்பெண். அந்தப்பெண் புகார் அளித்த பின்னரே திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்டவர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

அந்த மாணவி அளித்துள்ள புகாரில் ‘’பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறேன். அப்போது மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசுவையும், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜனையும் எனது பள்ளித் தோழி அறிமுகம் செய்து வைத்தாள். 

அதன்பிறகு அவர்கள் இருவரும் என்னுடன் போனில் பேசுவார்கள். அண்ணன் வயதில் இருப்பதால் இருவரிடமும் நானும் நட்போடு பழகினேன். பிப்ரவரி மாதம் 12-ம் தேதி நான் கல்லூரியில் இருந்தேன். அப்போது சபரிராஜன் எனக்கு போன் செய்து தனியாக பேச வேண்டும். உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிலையத்துக்கு வா எனக் கூறினான். அதன்படி ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அங்கு ஒரு பேக்கரி முன் நின்ற காரில் சபரியும், திருநாவுக்கரசும் காத்திருந்தனர். காரில் போய் கொண்டே பேசலாம் எனக் கூறினார்கள். அண்ணன் போல பழகுவதால் நான் காரில் பின் சீட்டில் ஏறினேன். என்னுடன் சபரிராஜன் உட்கார்ந்தார். காரை திருநாவுக்கரசு ஸ்டார்ட் செய்ததும் இன்னும் இரண்டு பேர் ஏறினர். 

சதீஷையும், வசந்தகுமாரையும் அறிமுகப்படுத்தினார்கள். கார் சிறிது தூரம் சென்றவுடன் நிறுத்தினார். அப்போது திடீரென சபரிராஜன் எனது மேலாடையை கழற்றினார். தடுப்பதற்குள் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சதீஷ் வீடியோ எடுத்தான். மேலாடை இல்லாமல் இருந்த என்னை வீடியோ எடுத்து மிரட்டினர். அத்தோடு பணம் கேட்டனர். பணம் இல்லை என்றவுடன் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டான். நான் கதறியதும் என்னை காரில் இருந்து தள்ளி விட்டனர். நான் இதை பெற்றோரிடம் சொல்லவில்லை. ஆனால் இந்த 4 பேரும் என்னை போன் செய்து பணம் கேட்டு மிரட்டினர். அதனால் 24-ஆம் தேதி எனது குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டேன். அதன் பிறகே புகார் கொடுக்க வந்தோம்’’ என தெரிவித்துள்ளார்.