நில அபகரிப்பில் திமுக வட்ட செயலாளர் இடையூறாக இருந்ததால் அவரை வெட்டிக் கொலை செய்ததாக கூலிப்படை தலைவன் முருகேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நில அபகரிப்பில் திமுக வட்ட செயலாளர் இடையூறாக இருந்ததால் அவரை வெட்டிக் கொலை செய்ததாக கூலிப்படை தலைவன் முருகேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுவரை போலீசிடம் சிக்காமல் இருந்து வந்த முருகேசனே போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதாவது கூலிப்படை கொலைகள், பழிவாங்கும் கொலைகள், அரசியல் கொலைகள் என அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி திமுகவின் 188வது வட்ட செயலாளராக உள்ள மடிப்பாக்கம் செல்வம் என்பவரை கூலிப்படை கும்பல் கொலை செய்தது. இது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பதுங்கியிருந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த விக்னேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி நவீன்குமார், சஞ்சய், புவனேஸ்வர் உள்ளிட்ட 5 பேர் கைதாகினர். அதேபோல் மேலும் இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் கூலிப் படைக்கு தலைவராக செயல்பட்ட வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் கொல்லச் சொன்னதால்தான் தங்கள் கொன்றோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனால் போலீசார் முருகேசன் தீவிரமாக தேடி வந்தனர். அம்பத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த முருகேசனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து முருகேசனிடம் விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. முருகேசன் அளித்த வாக்குமூலத்தில், அதாவது மடிப்பாக்கம் குபேரன் நகர் பகுதியில் யாருக்கு சொந்தமானது என தெரியாமல் கேட்பாரற்று 4 கிரவுண்டு இடம் இருந்தது.
அந்த இடத்தை மதுரை பகுதியில் உள்ள ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் கைப்பற்ற முயற்சித்தனர். அப்போது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த திமுக வட்டச்செயலாளர் செல்வம் அதற்கு தடையாக இருந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் தனக்குத் தெரிந்த கட்டுமான நிறுவனத்தின் மூலம் செல்வம் போர்ட் வைத்தார். அப்போது மதுரை முத்து சரவணன் பாபு அண்ணன் ஆகியோர் இந்த இடத்தை நீங்களே விற்றுக் கொள்ளுங்கள், எங்களுக்கு ஆளுக்கு 50 லட்சம் கொடுத்து விடுங்கள் போதும் மீதமுள்ள ஒரு கோடியோ அதற்கு மேல் எவ்வளவு வருகிறதோ அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில்தான் செல்வம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பலகையை அகற்றிவிட்டு புதிய பலகை வைத்தேன். ஆனால் அதற்கு செல்லும் இடைஞ்சலாக இருந்தார்.

இதனால் செல்வத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன், அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் வந்தது அப்போது மடிப்பாக்கம் பகுதியில் செல்வம் போட்டியிடுவதாக இருந்தது. அவரை சந்திக்க பலர் வந்தனர். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாங்களும், அவருக்கு சால்வை அணிவிப்பது போல சென்று அவரைப் போட்டுத் தள்ளினோம் எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கூலிப்படை தலைவன் முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மதுரை ரவுடி சரவணன், பாபு அண்ணன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
