மதம் மாறி திருமணம் செய்து கொண்டதற்காக நாகராஜூவை சையது அஷ்ரின் சுல்தானா சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தனர். 

ஐதராபாத் நகரின் முக்கிய சாலையில், பொது வெளியில் என் கணவர் தாக்கப்பட்டார். இரும்பு கம்பியில் தொடர் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த என் கணவரை காப்பாற்ற அங்கிருந்த யாரும் முன்வரவே இல்லை. அனைவரிடமும் உதவி கோரினேன், இருந்தும் யாரும் பதில் அளிக்கவில்லை. என் கணவரின் உயிர் போகும் வரை தாக்கியது எனது சகோதரனும், அவனின் நண்பர்களும் தான். அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என ஐதராபாத்தில் கொலை செய்யப்பட்ட நாகராஜூவின் மனைவி சையது அஷ்ரின் சுல்தானா தெரிவித்து இருக்கிறார்.

நாகராஜூ மற்றும் சையது அஷ்ரின் சுல்தானா தம்பதிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், அவர் இறந்த இரண்டு நாட்கள் கழித்தே கணவரின் வீட்டிற்கு முதல் முறையாக சென்று இருக்கிறார். இந்த நிலையில் தான், மதம் மாறி திருமணம் செய்து கொண்டதற்காக நாகராஜூவை சையது அஷ்ரின் சுல்தானா சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தனர். 

“எனது கணவரும், நானும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது சாலையை கடக்க எனது கணவர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். அப்போது திடீரென இரண்டு பைக்குகள் அங்கு வந்தன. அதில் இருந்தவர்களில் ஒருத்தர் எனது சகோதரன் என்று எனக்கு தெரியாது. அவர்கள் என் கணவரை கீழே தள்ளினர். அதில் நிலை தடுமாறி என கணவர் கீழே விழுந்து விட்டார். பின் என் கணவரை அவர்கள் இரும்பு கம்பியால் தாக்க துவங்கினர். நான் என் கணவரை காப்பாற்ற முயற்சி செய்தேன், ஆனால் என் சகோதரர்கள் என்னை தள்ளி விட்டனர். அங்கு நின்று கொண்டு இருந்தவர்களிடம் உதவி செய்யுமாறு கேட்டேன், ஆனால் அவர்கள் வீடியோ எடுப்பதில் தான் ஆர்வம் செலுத்தினர்” என சையது அஷ்ரின் சுல்தானா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கடும் தாக்குதல்:

மேலும் “பத்து முதல் பதினைந்து நிமிடங்களிலேயே எனது கணவரை சுமார் 30 முதல் 35 முறை இரும்பு கம்பியால் தாக்கினர். என் கணவரின் மூளையிலேயே தாக்கினர். அவர் இறந்ததும், நான் அவரின் தலையின் மீது கை வைத்தேன், அப்போது என் கை நேரடியாக அவரின் மூளையை தொட்டது.. பின் அவரின் மூளை அப்படியே என் கையில் விழுந்து விட்டது. சமூகம் மேல் கொண்ட நம்பிக்கையில் மக்களிடம் உதவி கேட்டு எனது நேரத்தை வீண் செய்து விட்டேன். அந்த நேரத்தில் என் கணவரை காப்பாற்ற நான் எதையாவது செய்திருக்கலாம். என் கணவருக்கு, என் சகோதரன் தான் அவரை கொலை செய்கிறான் என்று கூட தெரியாது.. இருபது பேர் சேர்ந்து இருந்தால், நான்கு பேரை மிக எளிதில் தடுத்து நிறுத்தி இருக்கலாம்,” என அவர் தெரிவித்தார்.

“என் கணவர் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என நினைத்து இருந்தேன். ஆனால் இன்று நான் பேட்டி அளித்துக் கொண்டு இருக்கிறேன். இது என் சகோதரன் மீது இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு. என் கணவர் உயிரிழந்ததற்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும்," என அவர் மேலும் தெரிவித்தார். கணவர் மறைவுக்கு பின் சையது நஷ்ரின் சுல்தானா கணவர் குழந்தை பருவத்தில் வாழ்ந்து வந்த வீட்டில், மாமியாருடன் வசித்து வருகிறார். 

பெற்றோரை எதிர்த்து திருமணம்:

கார் விற்பனையாளராக பணியாற்றி வந்த நாகராஜூ (வயது 25) சையது நஷ்ரின் சுல்தானாவை ஜனவரி 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இவர்களின் திருமணத்திற்கு முந்தைய நாள் சையது நஷ்ரின் சுல்தானாவை அவரது சகோதரன் தாக்கி, வீட்டின் அறையில் பூட்டி வைத்து தற்கொலை செய்து கொள் என கூறி இருக்கிறார். 

இதை அடுத்து ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய சையது நஷ்ரின் சுல்தானா, வீட்டை எதிர்த்து, தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் சிம் கார்டுகளை மாற்றி விட்டு, காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். காவலர்கள் இருவரையும் சமாதானம் செய்து, குடும்பத்தாரை விட்டு சில காலம் தனித்து இருக்க அறிவுரை வழங்கி இருக்கின்றனர். 

சையது நஷ்ரின் சுல்தானா மற்றும் நாகராஜூ பள்ளி பருவம் முதலே பழக்கம் கொண்டிருந்தனர். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதல் வெற்றி பெறும் என அவர்கள் நம்பினர். அவர்களுக்கு அதற்கு முன் மதம் எப்போதும் தடையாக இருந்திருக்கவில்லை.