திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு, வியாபாரியை தாக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இப்போதே விழா ஏற்பாடுகளில் பொதுமக்கள் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சிவா என்பவர் மின்னணு சாதனங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சென்ற விஷ்வ ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணர் சிலை வைக்க பணம் கேட்டுள்ளனர். சிவா 300 ரூபாய் கொடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்டோர் சிவாவை தாக்கியுள்ளனர்.

அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.