விருதுநகரில் அதிமுக நிர்வாகி ஒருவர் தனது வீட்டு வாசல் அருகே 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அல்லம்பட்டி மாத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற சண்முக ராஜேஸ்வரன் (44). கட்டிட காண்டிராக்டரான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார். சண்முகவேல் அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் அல்லம்பட்டியைச் சேர்ந்த முத்துக்காமாட்சி என்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து முத்துக்காமாட்சி தரப்பினருக்கும், சண்முகராஜேஸ்வரன் தரப்பினருக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் சண்முக ராஜேஸ்வரன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 7 கொண்ட மர்ம கும்பல் சண்முக ராஜேஸ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழி காரணமாக கொலை நடைபெற்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் அரசியல் கொலைகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.