நாடே கொரோனா பீதியில் இருந்து வரும் நிலையில் பணியில் இருந்த பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால், தடுக்கும் நோக்கில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சாலைகள்,  சிக்னல், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஐ.ஆர்.பி.என் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுபாஷிக்கு திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். 


 அதே பகுதியில் பணியிலிருந்த ஊர்காவல்படை பெண் போலீசாரிடம் சுபாஷ் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக திருபுவனை காவல்நிலைய போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து திருபுவனை போலீசார் சம்பந்தப்பட்ட பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் பெண் காவலர்களிடம் தவறாக நடந்துகொண்டது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து, அவர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.