விழுப்புரம் அருகே  சிறுமியை  உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரும் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை ஊரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலுக்கும், விவசாயக் கூலி வேலையும், சொந்தமாக பெட்டிக்கடையும் நடத்தி வரும் முருகன் என்பவருக்கும் நீண்ட கால முன்விரோதம் இருந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியான ஜெயஸ்ரீயை அப்பகுதியை சேர்ந்த  முருகனும், அவரது நண்பர் கலியபெருமாளும் சேர்ந்து வாயில் துணி வைத்து, கைகளை காட்டி முகத்தில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். 

இதில், 95 சதவீதம் தீ காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, முருகன் மற்றும் கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், குற்றவாளிகள் முருகன் மற்றும் கலிய பெருமாள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஏற்கனவே, சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.