சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த  சர்கார் கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று வெளியானது. இதில் சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி, அதிமுகவினர் இப்படத்துக்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் விஜய் பேனர்கள், கட் அவுட்கள் கிழித்து எறியப்பட்டன. தமிழக அமைச்சர்கள்  சர்க்கார் படத்திற்கும், அதில் நடித்த விஜய்யைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக செயலால் கடுமையான கோபத்தில் இருந்த விஜய் ரசிகர்கள்   தமிழக அரசை  விமர்சிக்கும் வீடியோவொன்று வாட்ஸ் அப்பில் வெளியானது. அந்த வீடியோவில் கையில் அரிவாளோடு அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன், வசை வார்த்தைகளையும் அந்த இளைஞர்கள் பேசியிருந்தனர். கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று, இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த நபர்களைக் கைது செய்யுமாறு, பிரகாஷ் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த வீடியோ குறித்து தகவல் தெரிந்தால்  சென்னை மத்தியக் குற்றப் பிரிவுக்கு தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டது.

நேற்று இந்த விவகாரம் தொடர்பாக சஞ்சய், அனிஷேக் என்ற இரண்டு இளைஞர்களை மத்தியக் குற்றப் பிரிவு காவல் துறை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த வீடியோவை எடுத்தவர் வடபழனியைச் சேர்ந்த அனிஷேக் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சர்ச்சை வீடியோவில் தோன்றியவர்கள் சஞ்சய், லிங்கதுரை என்பதும், இவர்கள் சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.