கொரோனா வைரஸ் தாக்கத்தால், தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிக நிதி கொடுத்தது, விஜய்யா? ரஜினியா? என்று எழுந்த பிரச்சனை, விபாரீதமாக மாறி நண்பனையே ஒருவர் குடி போதையில் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (22 ) , தீவிர விஜய் ரசிகர். அதே போல் இவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் இவருடைய நண்பர் தினேஷ் பாபு (22 ) தீவிர ரஜினி ரசிகர்.

வீட்டின் பக்கத்திலேயே வசித்து வருவதால், சிறு வயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் இருவருக்கும் அடிக்கடி, விஜய் - ரஜினி பற்றிய பிரச்சனைகள் வந்து ஓய்வது உண்டு.

அந்த வகையில் நேற்றைய தினம் இருவரும், எங்கிருந்தோ திருட்டுத்தனமாக மது வாங்கி வந்து வீட்டில் அருகிலேயே ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து அருந்தியுள்ளனர். அப்போது விளையாட்டு தனமாக, கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக நிதி கொடுத்தது விஜய்யா - ரஜினியா என்கிற பிரச்சனை எழுந்துள்ளது.

குடி போதை தலைகேறியதால், ஆத்திரத்தில் தன்னுடைய நண்பன் யுவராஜை, தினேஷ் பாபுவை கீழே பிடித்து தள்ளியுள்ளார். இதில் விஜய் ரசிகரான யுவராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த யுவராஜின் குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தினேஷ் பாபுவை கைது செய்து,  இறந்தவர் உடலை கைப்பற்றி, கனகசட்டிக்குளம் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

ஊரடங்கு நேரத்தில், விஜய் - ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை கொலையில் முடிந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.