ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கையில் வாள், துப்பாக்கி உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். மேலும் அவர்களை அந்த ஆயுதங்களை காற்றில் கண்மூடித் தனமாக வீசினர்.
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் புது வீடியோவில் நேற்றைய அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வாள், துப்பாக்கி, ஷாட் கன் உள்ளிட்டவைகளை காற்றில் கண்மூடித் தனமாக வீசிய பகீர் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ ஜஹாங்கீர்புரியின் சி-டி பிளாக் மார்கெட் பகுதியில் வைத்து எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ கல்வீச்சு தாக்குதல் தொடங்கும் முன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோ ஆதாரம்:
"நேற்று மதியம் சுமார் 2.15 மணி அளிவில் மார்கெட் பகுதியில் இருந்து வந்து கொண்டு இருந்தேன். அப்போது அனுமன் ஜெயந்தி ஷோபா யாத்திரை மார்கெட் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கையில் வாள், துப்பாக்கி உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். மேலும் அவர்களை அந்த ஆயுதங்களை காற்றில் கண்மூடித் தனமாக வீசினர். அப்போது தான் இந்த வீடியோவை எடுத்தேன்," என வீடியோவை பதிவு செய்த 30 வயதான அன்வாரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதேபோன்று 15 வயதான சாஹில் தனது கடையில் இருந்த படி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை வீடியோவாக பதிவு செய்ததாக தெரிவித்து இருக்கிறார். அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது என அவர் மேலும் தெரிவித்தார். வீடியோ இருந்தால் அதனை ஆதாரமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே அந்த வீடியோவை எடுத்தேன் என சாஹில் தெரிவித்து இருக்கிறார். இவர் வீடியோவை தனது கடையில் இருந்து கொண்டே எடுத்துள்ளார்.

கைது:
இந்த தாக்குதலில் எஸ்.ஐ. லாலை குறித்து மர்ம நபர் சுட்டதில், அவரின் உடலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. சி பிளாக்கில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் கடுமையான காயங்களை எதிர்கொண்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இத்துடன் பதற்றம் காரணமாக விரைவு அதிரடிப் படையினர் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
