வேலூரில் பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் மணிமாறன் (38). இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று 15 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கட்டாயப்படுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

 இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ந்து போன பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது நடந்ததை மாணவி கதறிய படி கூறியுள்ளார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.