வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில், தீக்குளித்த பள்ளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இந்த மாணவி, தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூற முடியாமல், கடந்த 13-ம் தேதி வீட்டில் மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து, உறவினர்கள் மாணவியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், `மாணவி உயிர் பிழைப்பது சந்தேகம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். சம்பவத்தின் வீரியத்தை உணர்ந்த பாகாயம் போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மாணவியிடம் `வாக்குமூலம் பெற்று வீடியோவாக பதிவு செய்தனர்.

அதில், நான் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு 5000 ரூபாய் கொடுக்குமாறு மிரட்டினர். அப்போது முதல் வேலூர் கோட்டைக்கு வா, அருகில் உள்ள மலையடிவாரத்துக்கு வா என்று மிரட்ட தொடங்கினர். 5000 ரூபாய் கொடுத்தால் வீடியோவை அழித்துவிடுகிறோம் என்று கூறினர். இதனால் வீட்டில் பணம் கேட்டேன். அப்போது, எதற்காக பணம் என்று கேட்டனர். எனக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன்.

உடனே, என்னுடைய சித்தியும், சித்தப்பாவும் அந்த பசங்கள அழைத்து கண்டித்து மிரட்டினர். ஆனால், பணம் தராவிட்டால் வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டினர். அவர்கள் மொபைல் போனில் நான் மட்டுமின்றி, என்னை போன்று நிறைய பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தனர். இதேபோல் பல பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். என்னுடைய வீடியோ இண்டர்நெட்டில்  வந்தால் என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று பயந்து தீக்குளித்தேன்.இவ்வாறு சிறுமி வாக்குமூலம் அளித்தார். சிறுமியின் வாக்குமூலத்தின்படி, தற்கொலைக்கு தூண்டியது, போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். 

இதனையடுத்து, 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் குடியாத்தம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.