நெல்லையில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் முத்துராமன் (34). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். தற்போது வள்ளியூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவரது உறவினர் ஒருவர் வள்ளியூருக்கு வந்திருந்தார். அவரை முத்துராமன் நேற்று இரவு தெற்கு வள்ளியூருக்கு காரில் அழைத்து சென்று விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் முத்துராமனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து முத்துராமனை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனையடுத்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்,  முன்விரோதம் காரணமாக முத்துராமனை வெட்டிக் கொலை செய்ததாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முத்துராமனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திமுக  நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.