சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி வாசல் முன்பு குமரேசன் என்ற இளைஞர் பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் வைஷ்ணவா கல்லூரிக்கு அருகே கனரா வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கனரா வங்கி ஏடிஎம் வெளியே இந்த கொலை சம்பவமானது நடைபெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட குமரேசன் என்பவர் சூளைமேட்டை சேர்ந்த கஞ்சா வியாபாரி என்று தெரிவந்துள்ளது. இவரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். 

இந்த கொலை தொடர்பாக உடனே அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குமரேசன் என்பவர் கஞ்சா வியாபாரி என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை கடந்த ஜனவரி மாதம் கொலை செய்வதற்கு முயற்சி நடைபெற்றதாகவும், தொடர்ந்து 2-வது முறையாக இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 

கஞ்சா விற்பனை போட்டியால் இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 3 கொலைகள் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் கல்லூரி வாசலில் நடந்த கொலையால் மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி காரணமாக கொலை அரங்கேறி வருகிறது. தலைநகரமாக இருக்கும் சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது என பொதுமக்கள் கூறியுள்ளனர்.