உத்திரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் பகுதியில் டிரைவராக பணியாற்றி வருபவர் பவன்குமார். இவர் சமீபத்தில் பணப்பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

பவன்குமார் விஷமருந்தியதை பார்த்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் அவரது உறவினர்களுக்கு இவர் இறந்தது குறித்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் இதை வெறும் தற்கொலை வழக்காக மட்டுமே நினைத்து போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரித்த போது தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

பவன்குமாரின் மனைவி என 7 பெண்கள் அவரது உடலுக்கு உரிமை கொண்டாடினர். இந்த 7 பேரும் ஒருவருக்கொருவர் முன்பு அறிமுகமில்லாதவர்கள். பவன்குமார் 7 பெண்களைத் திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் யாருக்குமே இதற்கு முன்பு தெரியாமல் இருந்தது. இந்த பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என போலீசார் யோசிக்கும்போதே இந்த 7 பேருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

அதன் பின் ஒருவழியாகச் சமாதானம் செய்து பவன் குமார் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. ஒருவர் 7 பேரை ஒருவருக்கு ஒருவரைத் தெரியாமல் மற்றவரைத் திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்துவந்த செய்தி பலரை ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.