உத்தரபிரதேசத்தில் உன்னாவ் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடங்குவதற்குள் அவரது உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட 18 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், மத்தியில் மற்றும் மாநிலத்தில் பாஜக ஆட்சி இருந்த போதும் பாலியல் குற்றம் அதிகரித்து காணப்படுகிறது.  

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உபிபூர் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண், கடந்த சனிக்கிழமை 90 சதவீத தீக்காயத்துடன் கான்பூர் எல்எல்ஆர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இப்பெண்ணை தூரத்து உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்ததாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.

முதலில் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் உ.பி மாநிலம் உன்னாவ்வில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், குற்றவாளிகளால் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.