ஆந்திராவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் எரித்துக்கொல்லப்பட்ட குற்றவாளிகள், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை மக்கள் மறப்பதற்குள், உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடுமையான கூட்டு பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 19 வயதான தலித் பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் தூக்கிச்சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக வெளியில் சொல்லாமல் இருக்க இளம் பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றனர். 

அவ்வழியாக வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மீட்கப்பட்ட பெண் முதலில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை, கடந்த திங்கட்கிழமை அன்று மேல்சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலித் பெண்ணுக்கு நேர்ந்த அநீதியை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வீராட் கோலி, நடிகர் அக்‌ஷயகுமார், நடிகை கங்கனாரனாவத் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தீப், ராமு, லவ்குஷ், ரவி ஆகிய நான்கு பேரைக் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு, கூட்டுப் பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளாதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயது தலித் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டுவிட்டரில் ஹேஷ்டாக்குகள் டிரண்ட் செய்யப்பட்டுள்ளது.