உத்தரபிரதேசத்தில் 10-வகுப்பு படிக்கும் மாணவியை காரில் கடத்திச் சென்று 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களிலேயே பீகாரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாலியா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் பலவந்தமாக ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றது. பின்னர், அந்த பள்ளி மாணவியை ஹாலியா வனப்பகுதி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சில மணிநேரம் கழித்து மாணவியை வீட்டுக்கு அருகே அந்த கும்பல் விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பெற்றோரிடம் கதறியபடி நடந்தவற்றை கூறியுள்ளார். 

உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், மாணவியை அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்தது உறுதியானது. இது தொடர்பாக சிஆர்பிஎப் வீரர் மகேந்திர குமார், கணேஷ் பிரசாத் பிந்த், லோவ்குஷ் பால், முன்னாள் ஜெயிலரின் மகன் ஜெய்பிரகாஷ் மவுரியா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிஆர்பிஎப் வீரர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.