உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுபட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு குடும்பத்தினரின் 13 வயது மகள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திடீரென மாயமானார். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள கரும்பு வயலில் சிறுமி கண்கள் வெளியேறியும் நாக்கு அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது கொலை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.